மாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை


புதுகை மாவட்ட கல்வித்துறையில் மாற்றங்களை முன்னேடுத்தோர் பட்டியலில் தவிர்க்க முடியாத சில ஆளுமைகள் இருக்கிறார்கள், எனக்கு ஆசிரியராக இருந்த சிவாஜி அய்யா முதல், பாவலர் பொன்.கா, நிலவன் அண்ணா வரை நிறைய ஆளுமைகளை கொண்ட நீண்ட பட்டியலில் ஆசிரியர்களின் மேலதிகாரிகளாக இருந்து தங்களுக்கே உள்ள தனித்த பாணியில் மாற்றங்களை முன்னேடுத்தோர் அநேகர்.

நான் அரசுப்பணிக்கு வருமுன்னர் மாற்றங்களை முன்னெடுத்த அதிகாரிகளில் ஒருவர் திருமிகு.கிறிஸ்டி. நான் பணியில் சேர்ந்த வருடங்களில் இவர் குறித்த நினைவலைகள் பகிரப்பட்டன.
கண்டிப்பும் கறாரும் அதிகாரத்தின் தவிர்க்கமுடியாத முகங்கள் என்பது நாம் அறிந்ததே. அந்தவகையில் என் நினைவில் இருப்பவர் திருமிகு.செல்லம் அவர்கள்.

தேனீ மாவட்டத்தில் துவங்கிய அம்மையார் குறித்து புரிந்துகொள்ள நண்பர் பாலா பகிர்ந்த ஒரு அனுபவமே போதும். மாவட்ட கணிப்பொறி தரவுப் பொறுப்பில் இருப்பவர் பாலா, அரசு மகளிர் பள்ளி சந்தைப்பேட்டையின் கணிப்பொறி ஆசிரியர். அதீத ஆர்வம் மிக்க செயல்பாடு  இவரது அடையாளம்.

ஒருநாள் காலையில் இவரை மெமோ படிவங்களை பிரதி எடுத்துக் கொடுக்கச் சொல்லிக் கோரியிருக்கிறார் அம்மையார். நூற்றுக்கும் அதிகமான மெமோ படிவங்களை பிரதியெடுத்துக் கொடுத்த பாலா இனி ஒரு மாதத்திற்கு பிரதியெடுக்கும் வேலை இருக்காது என்று நினைக்க, அன்று மாலை மாவட்டம் தழுவிய  தனது பள்ளிப் பார்வைகளை முடித்துக்கொண்டு அலுவலகம் திரும்பிய அம்மையார் “பாலா எல்லா பாரமும் தீர்ந்து போச்சு புதிதாக அடிக்க வேண்டும் எட்ன்று சொல்லியிருக்கிறார்”

ஒரே நாளில் நூற்றுக்கும் அதிகமான மெமோக்கள்.

கல்வித்துறையில் தீ பற்றியிருந்தகாலம் அது.
இவரது பணிக்காலத்தின் பொழுதுதான் அடியேன் முதல் முதலாக மாவட்ட வள ஆசிரியராக இருக்கப் பணிக்கப்பட்டேன்.
இதுகுறித்து மூத்த சங்கவாதிகளில் ஒருவரான திருமிகு.சாமி.சத்யமூர்த்தி (அப்போது அவர் தலைமை ஆசிரியர், இன்றைய மாவட்டக் கல்வி அலுவலர்) இளம் வயதில் யாரும் மாவட்ட வள ஆசிரியராக வர முடியாது, பணிக்காலத்தின் கடைசி ஆண்டுகளில் இருக்கும் அனுபவம்வாய்ந்த ஆசிரியர்கள்தான் வள ஆசிரியராக வர முடியும். கொடுத்த வாய்ப்பை பெயர் சொல்கிறது போல பயன்படுத்துங்கள் என்றார்.

உண்மைதான், ஆனால் அன்று அனைவருக்கும் இடைநிலைக் கல்வி மூலம் பற்பல புதிய திட்டங்கள் வந்துகொண்டிருந்தன. எபிஎல், எஎபிஎல், எஸ்.க்யு4ஆர் என ஆங்கில எழுத்துக்களில் அத்துணை எழுத்துக்களையும் மாற்றிப்போட்டு திட்டங்கள் அறிமுகமாக பணியில் மூத்த ஆசிரியர்கள் சிலர் வழக்கம்போல கடும் விமர்சனங்களை வைக்க, எதிர்மறை கருத்துக்களை வைக்காமல் நேர்மறையாகப்  பேச புதிய முகங்கள் தேவைப்பட்டன. (உண்மையில் அனுபவம் பெருக பெருக எதிர்மறைக்கருத்துகள் பெருகுகின்றன) ஆனால் புதிதாக அமைப்புக்குள் வருபவர்களுக்கு ஆப்டிமிஸ்டிக்காக பேச எளிதாக வரும். இந்த அடிப்படையில்தான் என்னை வள ஆசிரியர் குழுவுக்குள் இழுத்துப் போட்டிருக்கவேண்டும்.

வள ஆசிரியர்களாக நான் சந்தித்த சக ஆசிரியர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டேன். குறிப்பாக சோமசுந்தரம் என்கிற ஒரு அறிவியல் ஆசிரியர். இவர் போல ஒரு நாளாவது ஆசிரியராக பணியற்றிவிட்டால் நிறைவுபெறலாம். .

தனது பயிற்சிகளைப்  பாரதியாரின் கவிதைகளோடு துவங்கி, நடத்தி முடிக்கும் பொழுதும் அவருடைய வரிகளான “போவான் போவான்....” வரிகளோடு முடிப்பார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிறைந்த அறையில் இப்படி பேச ஒரு தனி கெத்து வேண்டும்.

உண்மையில் வள ஆசிரியராக இருந்ததில் எனக்கு நிகழ்ந்த நல்ல விஷயம் என்றால் அது திருமிகு.சோமு அவர்களை அறிந்ததுதான். வள ஆசிரிய பயிற்சிகள் மாநிலத்தின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும், அப்படியான பயிற்சிகளில் மாநிலத்தின் அத்துணை மாவட்ட ஆசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பலர் நெருங்கிய நட்பு வட்டத்துள் வந்தார்கள். கரூர்  ராஜசேகரனில் துவங்கி, தேனீ சரவணன், சென்னை அர்ச்சனா, மற்றும் குருபிரபு என ஒரு பெரும் வட்டம் அது.

நிலவன் அவர்களிடம் என்னை இழுத்துச் சென்ற புலவர் மகா சுந்தர் முதல் முதலில் என்னை ஆங்கில வள ஆசிரியர் என்றுதான் அறிமுகம் செய்தார். பிறகு ஒரே தளத்தில் இருப்பதை உணர்ந்ததால் ஜேசி, வீதி, விதைக்கலாம் என்று விரிந்ததற்கு காரணமும் அம்மையார் அன்று போட்ட துவக்கப்புள்ளிதான்.

“சப்ஜெக்ட்டெல்லாம் டீச்சர்ஸ்க்கு நல்லாவே தெரியும்,  மோட்டிவேட் மட்டும் பண்ணுங்க” என்பதும் எனக்கு அம்மையார் கொடுத்த வழிகாட்டுதலில் ஒன்று.

மெமொக்களை சரமாரியாக விநியோகித்தாலும், அவற்றுக்கு விளக்கம் மட்டுமே பெற்றார். குறிப்பாக தனக்கு மாறுதல் ஆணை வந்தபொழுது அவ்வளவு விளக்கங்களையும் ஒரே ஆணையில் கோப்புத்தவிர்ப்பு செய்துவிட்டார். ஆக, அச்சுறுத்தி பணியை பெருவதுமட்டுமே நோக்கமாக இருந்திருக்கிறது.

கல்வித்துறையை பொறுத்தவரை மெமோ பெறுவது என்பது அரிது. மாபெரும் தவறு என்ற பக்குவத்தில்தான் ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். வருவாய்துறை மற்றும் காவல்துறை பொறுத்த மட்டில் மெமோ பெறுவது மிக சாதாரண விஷயம் என்று சொல்வார் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.மோகன்.
முதல் முறையாக இதனை மாற்றி, மெமோ வழங்குவதை தனது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக வைத்திருந்தார். இதற்காவே இவர் விமர்சனத்துக்கு ஆளானாலும் தன்னுடைய போக்கை கடைசிவரை மாற்றிக்கொள்ளவே இல்லை.

பள்ளி பார்வைக்கு வந்தால் வெகு தூரத்துக்கு முன்னரே ஜீப்பை நிறுத்திவிட்டு சராசரி மனுஷி போல உள்ளே வருவதும், ஆசிரியர்கள் யாரும் வகுப்பிற்கு போகாமல் பள்ளி வளாகத்தில் உரையாடலில் இருந்தால் விசாரிப்பதும் நடவடிக்கை எடுப்பதும் இவர் பாணி.
பலமுறை இவரை அலுவலர் என்று தெரியாமல் யாரும்மா நீ எங்கள கிளாசுக்கு போகச் சொல்ற என்று சீறிய நண்பர்கள் உண்டு. அப்படி சீரியவர்கள் அன்றய தின ஊதியத்தில் குழந்தைகளுக்கு குறிப்பேடுகள் வாங்கித்தருகிறோம் என்று சொன்னால் வேறு நடவடிக்கைகள் இருக்காது.

நான் நம்ப சிரமப்படும் தகவலும் ஒன்று உலவியது. ஓர் உள்ளடங்கிய பள்ளியில் இருந்த ஆசிரியர்களுக்கு அம்மையார் அந்த பள்ளி இருக்கும் பகுதியில் ஆய்வில் இருபதாக தெரிவிக்கப்பட்டதும், அப்பள்ளியில் பணியாற்றிய ஒரு ஆசிரிய சகோதரிக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதாக சொல்வார்கள். நான் இத்தகைய தகவல்களை உறுதி செய்துகொள்வதில்லை.
ஆனால், இரண்டு முறை விளக்கம் கோரப்பட்ட ஒரு ஆசிரியர் மரணமுற்றது எனக்குத் தெரியும். ஆசிரியர் நேரடியாக அம்மையாரைச் சந்தித்து விளக்கியிருந்தால் இந்நேரம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியேற்றிருப்பார். அவர் மீளா குடி நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் மிகுந்த அச்சமுற்றுவிட்டார். அவரது மரணம் என்னை வேதனைப்படுத்ததான் செய்தது.

ஜஸ்ட் லைக்தட் அவரது மரணத்தை கடக்க முடியவில்லை, நிறையவே யோசித்தேன், ஏன் தமிழக கல்வித்துறையில் டி.டாக்ஸ் மையங்கள் இல்லை. அதீத அளவில் ஊதியம் பெரும் ஆசிரியர்கள் அவர்களின் குறைகளை களைந்துகொள்ள நம் அமைப்பில் ஏற்பாடுகள் இல்லை. ஒருவிதத்தில் அவர்களும் அமைப்பின் சொத்துக்கள்தான். அவர்கள் பராமரிக்கப்படவேண்டும்.
நீங்கள் நினைப்பதுபோல் இல்லை, குடி எல்லா வர்க்கத்தையும் ஊடுருவிவிட்டது. பலர் நாசுக்காக நடந்துகொள்வார்கள், சிலர் சுயத்தையும், பதவிக்குரிய மாண்பையும் மறந்துவிடுகிறபொழுது செய்திதாட்களின் ஒரு பத்தியில் சிரிக்கிறார்கள்.

இப்படி அம்மையார் கொடுத்த ஒரு விளக்கம் கோரும் கடிதம் ஒரு ஆசிரியரின் முற்றுப் புள்ளியானது குறித்து எனது வருத்தத்தை அவரைக் கோர்த்துவிட்ட அதே பள்ளியின் ஆசிரியரிடம் பகிர்ந்த பொழுது வெகு சுலபமாக அவர் அதை நியாயப்படுத்தினார். அவர் சொல்லித்தான் முழுக்கதையும் எனக்குத் தெரியும். அம்மையார் விளக்கம்தான் கோரினார், ஆனால் அதை எதிர்கொள்ளும் பக்குவம் அவருக்கு இல்லை என்பது நிதர்சனம். நாட்பட்ட குடி மூளையின் சிந்தனை திறன் மொத்தத்தையும் தின்று தீர்த்துவிட்டிருக்கவேண்டும். உச்ச கட்டமாக அவர் தலையில் விழுந்த கரண்டிக் கொத்து கொஞ்சம் கொஞ்சமாக சீழ்பிடிக்க அதை பற்றி உணராமலேயே  தனக்கு மிகவும் பிடித்த அரசு மதுபானக் கடையொன்றில் முடிந்து போனார் அவர்.

இப்படி செய்திகள் பரவினால் அப்புறம் கல்வி மாவட்டத்தின் ஆசிரியர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

அத்தனை விமர்சனங்களையும் தாண்டி அம்மையார் புதுகை கல்வி மாவட்டத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துப்போனதுதான் உண்மை. இன்னும் கோபம் தீராத நண்பர்கள் அம்மா நடவடிக்கை எடுத்தார்கள் சரி, மாநில தரப்பட்டியலில் முன்னேறவேயில்லை என்பார்கள்.

உண்மை அதுவல்ல, தின்று செரிக்க முடியாமல் மலைப்பாம்பு போல கிடந்த மாவட்ட பள்ளிக்கல்வியை மருண்ட மான் போல ஓட வைத்தது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
சாதனைப் பெண்மணிதான்.

சமீபத்தில் கவிஞர் தங்கமூர்த்தி அவர்களின் மூத்த பெண் நிவேதிதாவின் திருமண நிகழ்வுக்கு வருகைதந்திருந்த அம்மையாரை சாந்தித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

மெமோக்கள் குறித்து பேசும் பொழுது தம்பி நம்மை நம்பி வர ஏழை பாழை பிள்ளைகள் நல்லாப் படிக்கணும்னுதான் தம்பி அப்படி செய்தேன் என்றார், நெகிழ்ந்து போனோம்.

மறக்காமல் அவர்களை ஒரு லிப்டில் சந்தித்த அனுபவத்தை மனைவியார் அம்மையாரிடம் பகிர மறக்கவில்லை. ஒரு பணி நிமித்தம் நாங்கள் இருவரும் ஒரு அலுவலகத்தின் லிப்டில் இருந்து வெளிவர திறந்த கதவின் முன்னர் முதன்மைக் கல்வி அலுவலர். அடியேன் ஆட்டோமேட்டிகாக பின்னால் ஒரு அடி எடுத்துவைக்க, கையை பிடித்த மனைவி ஏங்க இப்போ சி.எல்லில் இருக்கீங்க என்று சொன்னதை மிகச்சரியாக நினைவில் வைத்திருந்து அம்மையாரிடம் சொன்னார்.

சிரித்துக்கொண்டே விடைபெற்றோம்.

முகவர்கள் தொடர்வார்கள் 

அன்பன் 
மது 

Comments