வீதி அறுபத்தி இரண்டு கல்வித்திருவிழா

வீதி கலை இலக்கிய அமைப்பு

வீதி அறுபத்தி இரண்டின் பொறுப்பாளர்கள் என புதுகை செல்வாவும் சகோதரி ரோஸ்லின் அவர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.



செல்வா தனது வாழ்வை ஒரு ஒளிப்பதிவு கூடத்தை நிர்வகித்து வருவதன் மூலம் நகர்த்துபவர்.


ஒளிப்பதிவு குறித்து பேசிக்கொண்டே இருப்பவர், திடுமென கல்வி குறித்து தனது கவனப்பரப்பை விரிவு செய்ய, கடந்த பத்து ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மலைவாழ் குழைந்தகளுக்கான கல்வி வாய்ப்புகளை வழங்கும் குழுவில் தன்னார்வமாக இணைய இன்று பொதுக்கல்விக்கான குரலாக ஒலிப்பவர்.

இவர் வீதி இலக்கியக் களத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டால் என்ன செய்வார்?

 மாணவர், ஆசிரியர், இலக்கியவாதிகள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினரை ஒன்றிணைத்து வீதி அறுபத்தி இரண்டை ஒரு மறக்க முடியாத கல்வி நிகழ்வாக மாற்றிவிட்டார்.

புதுகை நாணயவியல் கழகத்தின் தலைவரான பஷீர் அலி அவர்களும், கவிஞர் முத்துநிலவன் அவர்களும் நிகழ்வை முன்னெடுக்க கலகல வகுப்பறை சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

புதுகை செல்வா வரவேற்புரையாற்ற, திருமிகு மகாசுந்தர் அவர்களின் பாடலுடன் நிகழ்வு துவங்கியது.

புதுகையின் சமூக செயற்பாட்டாளர்களும், கவிஞர்களும், வாசகர்களும் வருகைதந்திருந்தனர். பாவலர் பொன்.கருப்பையா, அண்டனூர் சுரா, அமிர்தா தமிழ், சுப்புலெட்சுமி, வம்பன் செபா, ஐடியா பிளஸ் கிருஷ்ணவரத ராஜன் என பெரும் திரள் பங்கேற்பாளர்கள்.

கவிதைகளை வாசித்தனர் மணியும், அரவிந்தும் அவற்றின் மீது ஒரு உரையாடலோடு அனஸ் அல் செரீப் மைக்கேல் ஹார்டின் உலகின் புகழ்பெற்ற நூறு மனிதர்கள் என்கிற நூலை வெகு நேர்த்தியாக அறிமுகம் செய்தான்.

மிகத்தேர்ந்த ஒரு மேடைப் பேச்சாளனைப்போல பேசும் இவர் ஹஜனாதுல் ஜாரியா பள்ளி மாணவர். பலமுறை கரவொலிகளை பெற்ற பேச்சு.

மேடை கூச்சம், சபைக்கூச்சமின்றி அசத்தல் பையன்.

அடுத்தும் ஒரு அசத்தல் மாணவர் அது அத்வைத், வேள்பாரியின் பறவைகளைப் பற்றிய பேச்சு.

விழாவிற்கு வந்த இடத்தில் ஏற்கனவே கொடுத்த தலைப்பை மாற்றி கல்வி பற்றி பேசு என்ற பொழுதும் அசத்திய எழில் ஓவியா இந்தியாவின் ஹாப்பினஸ் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதற்கு கல்வி முறையும் பெற்றோரும்தான் காரணம் என்றார். மாணவர் விரும்பும் பாடத்தை விரும்பும் இடத்தில பயிலவும் அதற்குரிய பணியை வழங்கும் சூழலை ஏற்படுத்தும் அரசும், கொள்கைகளும் அவசியம் என்றார். வாவ்.

அடுத்து வந்த சந்தைப்பேட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் தன உரையின் பொழுது அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். புதுகை பள்ளிகளில் நானூற்றுக்கும் அதிகமான சேர்க்கையை கொண்ட முன்மாதிரிப் பள்ளி. பள்ளியின் கழிவறைகளை தானே துப்புரவு செய்யும் அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியர்.

தொடர்ந்து நகரின் நடுவே இருக்கும் அரசு உயர் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசினார். இவரது பள்ளி மிகக் குறைந்த மாணவர்களோடு இருந்த நிலையை மாற்றி இன்று முன்னூற்றி இருபத்தி ஐந்து மாணவர்களை பள்ளியில் இணைத்திருக்கிறார்.

எப்படி பள்ளிச் சூழல் தன்னுடைய சொந்த மகளின் ஆளுமை வளர்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிஏற்படுத்தி தந்தது என்பதை கூறினார்.

பள்ளியின் அத்துணை மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதை உறுதி செய்திருப்பதாகவும் அதற்காக பள்ளி வேலை நேரம் முடிந்த பின்னரும் சிறப்பு வகுப்பு இருப்பதாகவும் சொன்னார்.

அடுத்ததாக பேசிய பார்வைத்திறன் சவால் கொண்டோர் பள்ளியின் ஆசிரியர் சரவணன் மிக அற்புதமான பேச்சைத் தந்தார்.

அரசின் கொள்கை முடிவுகள் எப்படி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வியை கேள்விக் குறியாக்கியிருக்கிறது என்று தரவுகளோடு புட்டு புட்டு வைத்தார்.

அரசு ஒரு அசிங்கமான சொல்லாகி நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

ரீடிங் டே ஒன்றை அமைத்தால் எங்களுக்கு நன்றாக இருக்கும் என்றார்.

அடுத்தது அப்படி நீங்கள் படிப்பதை எங்களுக்கு உரக்கப் படித்து வாட்சப் செய்தாலே கோடிப்புண்ணியம் என்றார்.

அடுத்தது பார்வைத்திறன் சவால் உள்ள பள்ளி என்றாலே முதலில் சாப்பாடு போட வேண்டும் என்கிற என்னத்தை ஒழியுங்கள்.

ஒருநாளில் செரித்துப் போகும் உணவல்ல எங்கள் தேவை, எங்களுக்கான நூற்களை ப்ரைலி முறையில் அச்சிட உதவுங்கள் என்றார்.

அவர் பேசி அமர்ந்த அடுத்த கணம் அத்வைத் நூற்கள் அச்சிடும் பணிக்கென நிதியளித்தார்.

தொடர்ந்து, கவிஞர் நீலா தன்னுடைய கதை ஒன்றின் ஹீரோ அவையில் இருப்பதாகக் குறிப்பிட்டு அவரது அனுபவத்தை அவருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் பேசினார்.

கவிஞர் மைதிலி குழந்தைகளோடு நாம் அப்டேட்டாகிறோமா, எத்துனை ஆசிரியர்கள் ஜன்னலில் ஒரு சிறுமி படித்திருக்கிறார்கள், ஏன் டீச்சர் எங்களை பெயில் ஆக்குனீங்க ? படித்திருக்கோமா என்ற கல்விகளோடு தற்போதைய மாணவர்களின் நிலை குறித்தும் அவர்களை அணுகவேண்டியோர் கவனிக்க வேண்டிய கருத்துக்கள் குறித்தும் பேசினார்.

மிக நீண்ட காத்திருப்பின் பின்னரே கல கல வகுப்பறை சிவாவிற்கு பேச வாய்ப்பு வந்தது.

சிவா வெகு எளிய மொழியில், அன்றாட பேச்சு வழக்கில் தனது அனுபவங்களை பகிர்ந்தார்.

வீதி நிகழ்வுகளில் நிகழ்ந்த மிக அற்புதமான உரைகளில் ஒன்று சிவாவின் உரை.

கல்வியின் இன்றைய நிலை குறித்து, ஆசிரியர்களின் மாறவேண்டிய மனப்பக்குவம் குறித்து, துறையின் அசட்டுத்தனமான ஒருங்கிணைப்பு குறித்து அவர் பேசினார். அவர் முடிக்கும் பொழுது மணி மூன்று.

ஒருவர் கூட களைப்படையவில்லை, இன்னும் பேசுவாரா என்றே காத்திருந்தோம்.

அதை காணொளியாக்காது போனமைக்கு வருந்தினேன்.

அடுத்து
கவிஞர் மாலதி அவர்கள் நன்றி உரை பகிர வீதி அறுபத்தி இரண்டு இனிதே நிறைவடைந்தது.

மகிழ்வு
அன்பன்
மது


விழாவின் படங்கள்





























Comments

  1. நிகழ்ச்சித் தொகுப்பு அருமை
    வீதி குழுமத்திற்குப் பாராட்டுகள்

    ReplyDelete
  2. விழாவினை நேரில் கண்ட உணர்வு
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. சிறப்பான கூட்டம்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக