ராம்போ லாஸ்ட் பிளட்


மெல் கிப்சன் ஒருமுறை ஹாலிவுட்டின் ஆகப் பெரும் சாபம் சீக்குவல் படங்கள் என்றார்.



 நமது ரசிகர்களை நாம் ஒரே படத்தை மீண்டும் மீண்டும் கொடுத்து அவர்களுக்கு அலுப்புத் தட்ட வைத்துவிடுவோம் என்றார்.

ஒரு சீரிசாக தொடர்ந்து படங்கள் வரும் பொழுது அவை ஒரு திரைப்படத்தின் தனித்துவத்தை இழந்துவிடுகின்றன. கடந்த படத்தோடு இணைக்கவேண்டிய காட்சிகள், அடுத்து வரவிருக்கும் பாகத்தின் காட்சிகள் என்று கவனமாக தைக்கப்படும்பொழுது  தொடர் படங்கள் தங்களுடைய தனித்துவத்தை இழந்துவிடுகின்றன என்று பேசுவோரும் உண்டு.

சில்வர்ஸ்டார் ஸ்டாலோன் குறித்து மதன் (ஆனந்த விகடனில் இருந்த பொழுது) நாற்பதுகளை கடந்த நிலையில் தானே திரைக்கதை எழுதி, தானே இயக்கி நடித்து ஒரு பெரும் வெற்றிப் படத்தைக் கொடுக்க தில் வேண்டும் என்றார்.

இந்த தில்தான் ஸ்டாலோன்!

அவரது அதிநாயக சாகச படங்கள் இந்த ஸ்டாலோனைத்தான் நமக்கு காட்டுகின்றன.

பர்ஸ்ட் ப்ளட்டில் தன்  கிழிபட்ட கையில் ஊசியை நுழைத்து தைத்ததை நடுங்கிப் போய்ப்பார்த்தது உலகம்.

இப்படி தனக்கான பாதையை தானே பார்த்துப் பார்த்து வடிவமைத்துக் கொண்ட ஸ்டாலோன் ராம்போ படங்களின் மூலம் உலக ரசிகர்களை வந்தடைந்தார்.

தனக்கென கெத்தாக ஒரு இடத்தை செதுக்கி ஸ்டைலா கால் மேல் கால் போட்டு அமர்ந்துவிட்டார்.

இன்றைக்கும் பர்ஸ்ட் ப்ளட் கொடுத்த தாக்கத்தில்தான் இவரது மற்ற படங்கள் வெற்றி பெறுகின்றன. நான்காயிரத்து அறநூறு திரைகளில் வெளியாகி வசூல் குவித்துக் கொண்டிருக்கும் லாஸ்ட் ப்ளட் கொஞ்சம் வித்யாசமான படம்.

மகா நதியின் சிறைப்பகுதி ஜெயில் பேர்ட் என்கிற ஸ்டாலோன் படத்தில் இருந்து வந்த பல காட்சிகளை கொண்டிருக்கும். அதே போல குருதிப் புனலின் முதல் காட்சி ஸ்டாலோனின் தி ஸ்பெலிஸ்ட் படத்தின் முதல் காட்சியின் தழுவல் என்பதும் தெரிந்ததே.

ஆனால் இப்போ கதை திரும்பினது போல உணர்ந்தேன். மகாநதியை பார்த்துதான் டேக்கன் பிறந்தது என்பதை அதன் இயக்குனர் சொன்னபொழுது காலம் திரும்புவதை உணர்ந்தேன்.

மகாநதி, டேக்கன் இரண்டையும் மிக்சியில் போட்டு அடித்தால் லாஸ்ட் ப்ளட்டின் முதல் பாகம். இவ்வளவு சென்டிமென்டான ஒரு ராம்போ படம் இதற்கு முன் இல்லை என்பதுதான் வித்யாசமே. டேக்கனுக்கு பதிலாக மகாநதியை மீண்டும் மீண்டும் பார்த்து எடுத்தார்களோ என்னவோ?

ஆமா அப்போ இரண்டாம் பாகம்?

அக்மார்க் ராம்போ படம்.

ஆங்கிலத்தில் கோர் என்று சொல்வார்கள். இரத்தம் தெறிப்பதை, எலும்புகள் உடைவதை, சுவரெங்கும் ரத்த தீற்றல்களை விசிறல்களை கோர் என்பார்கள்.

இந்தப் படம் ரொம்பவே கோர்ஸம். ஸா, ஐ நோ வாட் யு டிட் இன் தி லாஸ்ட் சம்மர், பைனல் டெஸ்டிநேஷன் என இவ்வகைப் படங்களின் வரிசையில் தற்போதைக்கு முன் வரிசையில் இருப்பது ராம்போ லாஸ்ட் ப்ளட்தான்.

ஜாக் ரீச்சர் பன்ச்களில் ஒன்று உன் எலும்பை உடைத்து இரத்தத்தைக் குடிப்பேன். அதே போல ராம்போ தன்னுடைய மகள் இறந்தவுடன் சொல்கிறான் உயிரோட இருக்கும் பொழுதே இதயத்தை வெட்டி வெளிலே எடுத்த மாறி இருக்கு...இதை இறுதிக் காட்சியில் செய்தே காண்பிக்கிறான்.

பக்கத்தில் இருந்தவர்கள் சீட்டுக்கு மேலே கால்களை தூக்கிக் கொண்டுவிட்டார்கள். அத்துணை ரத்தம் தெறிக்குது, எத்துனை விதமான கொடூர மரணங்கள் இருக்கின்றனவோ அத்துணையும் நிகழ்கிறது திரையில்.

இடுப்பில் ஒரு குண்டு, தோள்பட்டை எலும்பில் ஒரு குண்டு என்றாலும் இறுதிக் காட்சியில் வில்லை எடுத்து அம்பு விடுகிறான் ராம்போ.

காலர் போன் உடைஞ்சவன் எப்டிடா வில் விடுவான் என்றெல்லாம் கேட்கக்கூடாது.

அதுதான்

அந்த கெத்துதான்

ராம்போ படம்.

படம் முடிவில் வரும் மாண்டாஜ் காட்சிகள் எல்லாமே ஒரு நெகிழ்வைக் கொடுத்தன. முதல் ராம்போ படத்தில் இருந்து வரிசையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள், ராம்போ ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஸ்டாலோன் ரசிகர்களுக்கும் எதிர்பாராத ஒரு ட்ரீட்.

மிஸ் பண்ணிடவே பண்ணாதீங்க.

அன்பன்
மது


Comments

  1. அவருக்கு எத்தனை எத்தனை ரசிகர்கள்....

    ReplyDelete

Post a Comment

வருக வருக