அவ்வப்போது அமெரிக்க மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் உலகை அதிர வைக்கும். பள்ளி வளாகத்தில் வெடிக்கும் துப்பாக்கிகள், ஏதாவது ஒரு மத குருவை நம்பிக்கொண்டு அவனோடு சேர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபடுதல், குழு தற்கொலைகளை செய்து கொள்ளுதல் என்று பல்வேறு விதத்தில் சம்பவங்கள் நடக்கும்.
இதை குறித்து தொடர் கட்டுரைகள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் பின்னர் உருவாகும்.
போனி அண்ட் கிளாய்டு என்கிற படத்தில் துவங்கி சமீபத்தில் வந்திருக்கும் த ஆர்டர் வரை அவ்வகை படங்களே.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கை தீர விசாரித்து உண்மையை கண்டறிவதை வழக்கமாக வைத்திருக்கும் ஒரு துப்பறிவாளன் வாயிலாக விரிகிறது கதை.
அமெரிக்க பாதாள உலகத்தில் இயங்கி வருகிறது ஒரு தேவாலயம், இந்த தேவாலயம் இயந்திரத்து துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாவலர்களால் பாதுகாக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் அயல் நாட்டு மனிதர்களை வேட்டையாடி விரட்டுவதே இந்த குழுவின் நோக்கம்.
வரலாறு அறிந்தவர்கள் இந்த குழுவின் நோக்கத்தை அறிந்தால் உருண்டு புரண்டு சிரிப்பார்கள்.
அமெரிக்க மண்ணில் அதன் மெய்யான உரிமையாளர்கள், செவ்விந்தியர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை அறிந்தோம் என்றால் ரத்தக்கண்ணீர் வந்துவிடும்.
இந்த லட்சணத்தில் அமெரிக்காவை தூய்மை செய்கிறேன் என்று கிளம்பிய குழுவின் கதை தான் இந்த படம்.
இந்த பெரிய குழுவில் இருந்து ஒரு சிறு குழு உடைந்து பிரிந்து தீவிரவாதத்தை கையில் எடுத்துக் கொள்கிறது.
இவர்களை வேட்டை நாய்போல் பின் தொடர்ந்து போகிறான் துப்பறிவாளன்.
ஜூட் லா தன்னுடைய நோயையும் பொருட்படுத்தாது வெறிகொண்ட வேட்டை நாய் போல் குற்றத்தின் பின்னணியை தேடி அலைவது, இவரது வேட்டையில் இணைந்து கொள்ளும் அந்த கவுண்டியின் காவலராக வந்திருக்கும் டை ஷெரிடன் ரகளை விட்டிருக்கிறார்.
படத்தின் கதையைத் தாண்டி என்னை மிகவும் கவர்ந்த விஷயம், திரை இசை. ஜெட் கர்சல், மனிதன் ரகளை செய்திருக்கிறார்.
ஒரு கோப்பை தேநீரை மிடறு மிடறாக குடிக்கும் பழக்கமுடையவர்களுக்கு இந்த படம் நிறையவே பிடிக்கும்.
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக