தமிழ்ப்பாடம் கற்பித்தலுக்கான வகுப்பறை உத்திகள் Part IItamil teaching tips, kasthuri rengan, www.malartharu.org, tamil nadu, india
Joyful Learning


பாடப்பொருள் குறிக்கோள்
 பாடப்பொருள் குறிக்கோள் என்பது பாடப் பகுதிக்கு ஏற்ப மாறுபடும் தன்மையுடையது. எடுத்துக்காட்டாக ஒரு செய்யுள் பகுதிக்கு உரிய மொழிக் குறிக்கோள்கள் பாடப் பொருள் குறிக்கோள் ஆகியவற்றைப் பற்றி ஈண்டு காண்போம்.

செய்யுட்பகுதி

வாழ்த்து
  ஒரு செயலைத் தொடங்கும் முன் அது இனிதே நிறைவேறுவதற்கு இறைவனை வாழ்த்தி பாடுதல் தமிழிலக்கிய மரபு. முனிவர், அந்தணர், மழை, முடியுடை வேந்தர், உலகு என்னும் ஆறினையும் வாழ்த்துவது அறுமுறை வாழ்த்து எனப்படும். கடவுளின் பண்புகளை எடுத்துக் கூறுவது கடவுள் வாழ்த்து ஆகும்.
                             
                      திருமால்
      உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
      மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
      அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவனவன்
      துயரறு சுடரடி தொழுதெழுஎன் மனனே!
                                              -நம்மாழ்வார்


   இவ்வாழ்த்துப்பாடலை பாடியவர் நம்மாழ்வார். தந்தை காரிமாறன். தாயார் உடைய நங்கை. இவர் வைணவ அடியார்கள்(ஆழ்வார்கள்) பன்னிருவருள் ஒருவர். இவருக்கு பராங்குசன் மாறன்,  வேறு பெயர்களும் உண்டு. இவர் பாண்டிய நாட்டிலுள்ள திருக்குருகூரில் பிறந்தவர். இவ்வூர் இன்று ஆழ்வார் திருநகரி என வழங்குகிறது.
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன இவரின் நான்கு பிரபந்தங்கள். இப்பாடப்பகுதியில் உள்ள பாடல் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள திருவாய்மொழியில் உள்ளது.
   தமிழ் இலக்கிய வளர்ச்சிக் காலத்தில் சமயக் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை நிலவியது.
இவ்விடைப்பட்ட காலத்தின் முன் சமண, புத்த மதங்கள் செல்வாக்கு பெற்றிருந்தன. அம்மதங்களை மறுப்பதற்கும் மக்களிடம் பக்தி நெறியை வளர்ப்பதற்கும் கலை நயத்துடன் கூடிய பல பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. ஆழ்வார்கள் திருமாலையும் நாயன்மார்கள் சிவனையும் புகழ்ந்து பல பாடல்கள் பாடியுள்ளனர். நம்மாழ்வார் சமயக்காலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
   திருமாலைப் பாடிய வைணவ ஆழ்வார்கள் இயற்றிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் எனப்படும். திருமாலின் இனிய குணங்களில் ஆழ்ந்து பாடப்பட்டவையாதலின் இவை திவ்யப் பிரபந்தம் என்றும், நாலாயிரம் செய்யுள்கள் இருப்பதால் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் பெயர் பெற்றது. ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்கள் பாடிய பிரபந்தங்கள் இருபத்து நான்கு, இவற்றுள் ஓன்று திருவாய்மொழி. இது பத்து எனும் பெயருடன் பத்து பெரும் பிரிவுகளாகவும், திருவாய்மொழி எனும் பெயருடன் உட்பிரிவுகளாகவும் அமைந்தது. ஒவ்வொரு பத்திலும், பத்துத் திருவாய் மொழிகள் உள்ளன.
   இறைவன் பெருமைகளையும் சிறப்புகளையும் கூறுவதும் அவன் அருள் திறத்தை விளக்குவதும் அவன் திருவடியை வணங்க வேண்டும் எனக்கூறுவதும் இப்பாடலின் நோக்கமாகும்.
   இப்பாடலில் நம்மாழ்வார், இறைவனை உயர்ந்த பண்புகள் உடையவன் என்றும், அறியாமையை அகற்றுபவன் என்றும், அறிவு நலம் அளிப்பவன் என்றும், தேவர்களின் தலைவன் என்றும் வாழ்த்தி, அவ்விறைவனின் திருவடிகளைத் தொழ வேண்டும் என கூறுகிறார்.


தொடரும்...

நன்றி
பள்ளி நடைமுறை வழிகாட்டி நூல்
வெளியீடு தமிழ் நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்
சென்னை – ஆறு


Comments