வருண் காந்தி - நேரு குடும்பத்தில் தடம் மாறிய அரசியல் வாரிசு. இந்திரா காந்தியின் மருமகள்கள் சோனியா, மேனகா இருவருக்குமிடையேயான நீயா நானா போட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர் மேனகா. அடுத்தவீட்டில் இப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவரை இழுத்துக்கொள்கிற பகை வீட்டு மரபுப்படி பாரதிய ஜனதா கட்சி மேனகாவை சேர்த்துக்கொண்டது. அவரது மகன் வருண் காந்தி இப்போது அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவர். உ.பி. மாநிலத்தின் பிலிபித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது உ.பி. மாநிலத்தில் பிரச்சாரம் செய்த வருண், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களை இழிவு படுத்தும் வகையிலும், மதப் பகைமையை வளர்க்கும் விதத்திலும் பேசினார். பாஜக பிரச்சாரப் பொறுப்பு தனக்குத் தரப்பட்டது நியாயமே என்று இந்துத்துவ கும்பல்களுக்கு நிரூபித்தார்.
மதப்பகைமையைத் தூண்டியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, காவல்துறையால் சாட்சிகளாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்களில் 88 பேர், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பல்டியடித்தார்கள். காவல்துறை மிரட்டியதால் முதலில் வருணுக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாகவும் கூறினர். நீதிமன்றம் வருண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. பாஜக அதை கொண்டாடியது.
இப்போது ‘டெஹல்கா’ பத்திரிகையும் ‘ஹெட்லைன்ஸ் டுடே’ தொலைக்காட்சியும் இணைந்து, ரகசிய விசாரணை முறையில், மேற்படி 88 சாட்சிகளிடம் பேச்சுக்கொடுத்து, அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை வெளியிட்டுள்ளன. நீதிமன்றத்தில் சாட்சியத்தை மாற்றிச் சொல்லுமாறு தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும், பணம் தரப்பட்டதாகவும் அந்த அவர்கள் கூறியிருக்கிறார்கள். தாங்கள் பேசுவது ரகசிய கேமராவில் ஒளிப்பதிவாகிறது என்பது தெரியாமலே, தங்கள் மீது அக்கறைகொண்டவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாக நினைத்து, உண்மையைச் சொல்லிவிட்டார்கள்.
அது மட்டுமல்ல, “அந்தத் தேர்தலில் பாஜக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ரியாஸ் அகமது தோற்கடிப்பதற்கு, வருண் உதவினார். அந்த உதவிக்கு பதிலுதவியாகவே, சாட்சிகளை பல்டியடிக்கச் செய்ய ரியாஸ் அகமது ஒத்துழைத்தார்” என்றும் அந்த ரகசிய விசாரணைச் செய்தி சொல்கிறது.
ஒரு பக்கம் இஸ்லாமிய மக்கள் மீது பகை வளர்க்கும் இந்து மதவாத அரசியல்; இன்னொரு பக்கம் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக தன் சொந்தக் கட்சிவேட்பாளரையே தோற்கடிக்க இஸ்லாம் மதம் சார்ந்த வேட்பாளருடன் ஒத்துழைப்பு! ஓ, இதுதான் பாஜக மாடல் மதநல்லிணக்கமோ?
பாஜக எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக ‘டெஹல்கா’ ஏடு இப்படி தவறான செய்தியைப் பரப்புகிறது என்று வழக்கம்போல வருண் காந்தி பழியைத் தூக்கி பத்திரிகை மீது போட்டிருக்கிறார். ஆனாலும் பாஜக கட்சிக்குள், “இப்படிப்பட்ட ஆளுக்காய்யா பொதுச்செயலாளர் நாற்காலியும் எம்.பி. பதவியும்,” என்று புகைச்சல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
இந்த இரண்டு ஊடகங்களும் சேர்ந்து நடத்திய ரகசிய விசாரணை முறைக்கு ஆங்கிலத்தில் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்று பெயர். ஸ்டிங் என்றால் ‘கொட்டுவது’ என்று பொருள். அவர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். இந்த விசாரணையின் உண்மையோ தேள் கொடுக்காகக் கொட்டுகிறது.
நன்றி திரு Kumaresan Asak முக நூல் பக்கம்
========================
Comments
Post a Comment
வருக வருக