மதத்தை நம்புகிற மக்களே

 
சயீத் கமலா என்ற சுஷ்மிதா பானர்ஜி (வயது 49) ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த இந்திய எழுத்தாளர். அந்நாட்டின் பாக்திகா மாகாண தலைமையகமான கரானா நகரில் அவரது வீட்டிற்குள் புதனன்று (செப்.4) இரவு புகுந்த ஒரு கும்பல் அவரது கணவரையும் மற்றவர்களையும் கட்டிப்போட்டுவிட்டு அவரை வெளியே இழுத்துச் சென்றது. பின்னர் அவர் உடலில் துப்பாக்கிக் குண்டுகளைச் செலுத்தி, உடலை ஒரு இஸ்லாமியப் பள்ளி அருகில் போட்டுவிட்டுச் சென்றது. அந்தக் கும்பல் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுஷ்மிதா பெற்றோர் தடையை மீறி ஜான்பாஸ் கான் என்ற வர்த்தகரைக் காதலித்து மணந்தவர், இஸ்லாமியராகவும் மாறியவர். ஆப்கானிஸ்தான் சென்று வாழ்ந்தவர்.

கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆயினும் முதல் மனைவி மீது பரிவு கொண்டவராக அவருக்குப் பிறந்த குழந்தைகளையும் தானே ஏற்று வளர்த்து வந்தார்.

தாலிபான்களின் கோபத்திற்கு சயீத் கமலா இலக்கானது ஏன்? அடக்க ஒடுக்கமாக இருக்காமல் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாகப் பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர்களது சுகாதாரப் பாதுகாப்புக்காகவும் பாடுபட்டார். பெண்கள் வீட்டோடு முடங்கியிருக்க வேண்டும் என்ற தாலிபான் கட்டளையை மீறி ஒரு சிறு மருந்துக் கடையையும் நடத்திவந்தார்.

இந்தக் கொலையை தான் செய்யவில்லை என்று தாலிபான் அமைப்பு கூறுகிறது என்றாலும் தாலிபான்களின் தாக்குதலை ஏற்கெனவே சந்தித்தவர்தான் சயீத் கமலா. 1995ல் தாலிபான்களால் கடத்தப்பட்டு ஒரு தனியறையில் பல நாட்கள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். ஒரு நாள் துணிந்து அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்தார். அந்த அனுபவத்தை ‘காபுலிவாலர் பங்காளி போவ்’ (ஒரு காபுலிக்காரரின் வங்காளி மனைவி) என்ற புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இந்தி மொழியில் ‘எஸ்கேப் ஃபிரம் தாலிபான்’ என்ற பாலிவுட் திரைப்படமாகவும் 2003ல் வந்தது. அதில் கதாநாயகியாக நடித்தவர் மணிஷா கொய்ராலா.

மதவெறியர்கள் கொலை செய்ததால் சயீத் கமலா ஆகிய சுஷ்மிதா பானர்ஜி என்ற பெண் எழுத்தாளரின் வாழ்க்கை முடிந்திருக்கலாம். ஆப்கானிஸ்தானில் பெண்களின் சம உரிமைக்கான எழுச்சிக்கான எழுத்து முடிந்துவிடுமா?

மதத்தை நம்புகிற மக்களே, உங்கள் மதத்தின் பெயரால் இழைக்கப்படுகிற இப்படிப்பட்ட மானுட விரோதக் கொடுமைகளை அனுமதிக்கப் போகிறீர்களா?
நன்றி  அய்யா திரு குமரேசன் அசாக்,  https://www.facebook.com/kumaresan.asak?hc_location=stream
எல்லா மதங்ககளும் ஒன்றுபடுவது இது   ஒன்றில்தான்... ஆனால் சகிப்பு தன்மை அற்று அழிவு செயலில் ஈடுபடும் அந்த நொடியில் இறைவன் அவர்களுடன் இருப்பதில்லை என்பதே உண்மை. ...

Comments

  1. மக்கள் மனங்களின் மாபெறும் மாற்றம் வந்தால் தான் இந்த மானுடம் தழைக்கும். அன்பின் வழியில் மற்றவர்களைப் பார்த்தால் இது போன்ற நிகழ்வு நடைபெறாது. கனமான செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete

Post a Comment

வருக வருக