காணாமல் போனவர்கள் ...

நண்பர் ஜெயப் பிரபு அவர்களின் மீள் பதிவு ஒன்று ... சிந்தைக்கு உணவாக 


கார்ப்பரேட் கம்பெனிகளுடைய குரூர புத்தி:
புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமசுக்கெல்லாம் செல்போன் கம்பெனிக்காரர்கள் நம் நாட்டுக்குள் டவரடி எடுத்து வைக்கும் வரை வாழ்த்து அட்டைகள் அனுப்பிக் கொண்டு தான் இருந்தோம்.

அது 15 பைசா தபால் அட்டையில் இருந்து 15 ரூபாய் வசதி படைத்தவர்களுக்கான அட்டை வரை,வகைவகையாயிருக்கும்.
இவர்கள் உட்புகுந்து மக்களை சோம்பேறிகளாக்கி, முடமாக்கி, தபால் நிலையங்களுக்கெல்லாம் செல்லவே விடாமல் செய்துவிட்டனர்.
நண்பனாக, தந்தையாக,தாயாக, காதலியாக- அவரவருக்கு உற்ற வகையில் இரண்டு தெருவுக்கு ஒன்றாய் தொங்கிய சிகப்பு தபால் பெட்டிகள், அப்போது காட்சியளித்தன.
எழுத்தாளர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் என் கல்லூரிப் பருவத்தில் கடிதங்கள் எழுதியதுண்டு.
சிலர் பதில் அட்டைகள் போடுவார்கள். 'பேனா நட்பு' என்றொரு வட்டமும் தபால் கார்டுகள் வழியாக இயங்கி வந்தது.
வேண்டாதவனுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகளில் போதிய வில்லைகள் ஒட்டாமல் அனுப்பியதும், பெற்றதும் பள்ளி நாட்களில் மறக்க முடியாதவை.
அப்படியெல்லாம் பெறப்பட்ட வாழ்த்து அட்டைகள் 5 ஆண்டுகள் வரை கூட பொக்கிஷமாய் பாதுகாக்கப் பட்டு வந்தன.
தபால்காரர் சைக்கிளில் வந்து மணியடித்து அழைக்கும் அழகு சொல்லி மாளாது. காக்கியிலிருந்து நீல நிறத்திற்கு அவர்கள் சீருடை மாறிய கால கட்டம் முக்கியமானது.ஏனெனில் அதன் பின்னர் அவர்கள் சரிவை சந்திக்க நிர்பந்திக்கப்பட்டார்கள்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மீசை வைத்து, ஒல்லியாய் வந்த தபால்காரர், மற்றொருவர்- இருவரும் எங்கள் தெருவில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்ப உறுப்பினர்கள் ஆகிப் போனார்கள்.
வெயிலில் களைப்பாய் வரும் அவருக்காகவே ஜூஸ் போடும் போது அவருக்காகவும் ஒரு தம்ப்ளரில் எடுத்து வைப்பதுண்டு.
தீபாவளிக்குப் பிறகு வரும் நாளில் அவர்களை வீட்டுக்குள் அழைத்து பலகாரங்கள் பரிமாறி அனுப்புவதும், பொங்கலுக்குப் பிறகு கரும்பு, வாழைப் பழங்களை கொடுத்து அனுப்புவதும் பேரானந்தம் தரும்.
செல்போன்களின் வருகைக்குப் பிறகு இவர்கள் பலருக்கு அன்னியர்களாகிப் போனார்கள்.
பெரிய பனமுதலை நெட் வொர்க் கம்பெனிகள், தாராளத்திலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதை மெல்ல மெல்ல தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டன.
அளந்து அளந்து அதிகபட்சம் இத்தனை எழுத்துக்கள் தான் என கண்டிப்பு காட்டின. பின்னர் பூஸ்டர் ப்ளான், காம்ப்ளான் ப்ளான் என குழப்பியடித்தன.
கடைசியாக இப்போது மக்கள் நல்ல மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஒவ்வொரு தினத்திலும், அதற்கு முன்பு ஒரு நாளும் மெசேஜ் அனுப்பவே கூடாது என்ற முடிவோடு கட்டணங்களை கடுமையாக்கிவிட்டன.
இதென்ன நியாயம் எனப் புரியவில்லை. உண்மையிலேயே இவர்கள் தங்களது வாடிகையாளர்கள், தங்களுக்கு ஆயுள் முழுதும் வருமானம் ஈட்ட வாய்ப்பு கொடுப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அல்லவா இருக்க வேண்டும்?
அதைவிடுத்து வாழ்த்துக்கள் அனுப்பப்படுவதை தடை செய்யும் நோக்கில் இவர்கள் கட்டணங்களை மக்களுக்கு விதிப்பதால், இவர்களது குரூர புத்திதானே வெளிப்படுகிறது?
வாடிக்கையாளர்கள் இல்லையென்றால், இவர்கள் இல்லை என்ற எண்ணம் இவர்களுக்கு வராமல் போனதேன்?
எப்படியும் இவர்கள் நம்மிடம் வந்துதானே ஆக வேண்டுமென்ற ஆணவம் தானே காரணம்?
இவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காகவே மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் 1 நிமிடம் மட்டும் அவர்களது இணையம் மற்றும் செல்போன் சேவையை ஸ்விட்ச் ஆஃப் செய்து புறக்கணித்தால் என்ன ஆகும் என்பதை இவர்கள் அறிவார்களா?
நம் பாசக்கார தபால்காரகள் எங்கே போனார்கள்?
எங்கே வாழ்த்து அட்டை விற்பனையாளர்கள்?
மன்னித்துவிடுங்கள் நீங்கள் தொலைய காரணம் நாங்களில்லை.
-காலம்

ஆக்கம்
ஜெயப் பிரபு 

என்ன நீங்கள் தபால் கார்டுகளை கையில் எடுக்க தீர்மானித்து விட்டீர்களா ? 

Comments

  1. பகிர்வு பழைய நினைவுகளைக் கிளறி விட்டது.
    அண்ணன் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது எங்கள் வீட்டு முகவரிக்கு சிவாஜி வாளைத் தூக்கிக் காண்பிப்பதைப் போல ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை வந்தது.
    ஏற்கனவே முத்திரை இடப்பட்டு அனுப்பப்பட்ட பழைய வாழ்த்ட்டை முகவரி மட்டும் மாற்றி ஒட்டப்பட்டு...!
    வாழ்த்துகளுடன் “ மறிமுகம் “
    என்று இருந்தது.
    அந்த மறிமுகம் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
    இருநாட்களுக்கு முன்னர்தான் அண்ணனிடம் கேட்டேன்.
    அண்ணே மறிமுகம் நினைப்பிருக்கா?
    அண்ணன் மறந்து போயிருந்தார்.
    பழைமையாய் மாற முடியாதபோதும் பழையன நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறதுதானே!
    ந்ன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்

      Delete
  2. Replies
    1. வாக்கிற்கு நன்றி

      Delete
  3. உண்மையைச் சொல்லும் பகிர்வு..
    அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. உண்மைதான் இன்றும் என்னிடம் உள்ளன வாழ்த்துமடல்கள் என் பால்ய கால உறவுகளின் பாசத்தைக்கூறிக்கொண்டு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு நண்பர் ஜெயப் பிரபு அவர்களின் மீள் பதிவு ... உண்மையானது. செல் போன் ... இணையம் வந்தவுடன் உலகமே சுருங்கிவிட்டதே! தபால்காரராவது இருக்கிறார்கள்...தந்தி நிலையங்கள் இல்லாமலே போய்விட்டதே! எங்க காலத்தில எல்லாம்...........................!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அய்யா..

      Delete
  6. வேண்டாதவனுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகளில் போதிய வில்லைகள் ஒட்டாமல் அனுப்பியதும், பெற்றதும் பள்ளி நாட்களில் மறக்க முடியாதவை. - உண்மைதான் மது. இந்தப் பசுமை நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். இப்போது நடந்த எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் அனுப்பிய சுமார் 600 அஞ்சல்்களில் குறைந்தது 50அழைப்பாவது போய்ச்சேரவில்லை என்பதும் இன்றைய எதார்த்தம். (நண்பர் விஜூவும் அய்யா மதிவாணனும் அழைப்பில்லாமல் கேள்விப்பட்டே வந்த நாகரிகர்) இப்போது சொல்லுங்கள் “நம் பாசக்கார தபால்காரகள் எங்கே போனார்கள்?

    ReplyDelete
    Replies
    1. வேண்டாதவனுக்கும் வாழ்த்து? அதும் ஒரு வில்லத் தனத்தோடு..

      Delete
  7. தபாலுக்கு காத்திருப்பது எவ்ளோ சந்தோஷமான விஷயம் தெரியுமா !!
    அவங்க கடிதம் ..கொடுத்ததும் ஒரு டம்ளர் நீர் அல்லது மோர் குடுப்போம் .. ஊரில் இருந்தப்போ ....ஏதாவது வெளிநாட்டு தபால் வந்தா பத்திரமா ஸ்டாம்பை எடுக்க போட்டியும் நடக்கும்
    இங்கே இன்னும் அந்த SMS மோகம் இல்லை :) இப்பவே கிறிஸ்மசுக்கு வாழ்த்து அட்டைகள் விற்பனை அமோகமா நடக்குது யூகேவில் .ROYAL மெயில் கிறிஸ்மஸ் சமயத்தில் புதிய ஸ்டாம்ப்ஸ் கூட ஒவ்வோராண்டும் வெளியிடுவாங்க ...என் கணவர் அவர் அப்பா அனுப்பிய க்ரீடிங் கார்ட்ஸ் இன்னும் பத்திரமா வச்சிருக்கார் 19 வருஷமா !!
    இதெல்லாம் SMS இல் சாத்தியமா ? ..நாம் தான் சிந்திக்கணும் ..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ...
      அப்போது நிறய தபால் வில்லைகளை சேமிக்க முடிந்தது.

      Delete
  8. காலையில் கணினிப் பெட்டியைத் திறந்தால், தபால் பெட்டியைப் பற்றிய அருமையான ஒரு பதிவுப் பகிர்வு!

    டெக்னாலஜி ஹேஸ் க்ரோன் ஸோ மச்சா??!! என்று மகளிர் மட்டும் வசன்ம்தான் நினைவுக்கு வருகின்றது....

    வளரும்/வளர்ந்த டெக்நாலஜி இதோ இப்படி இணையத்தில் எழுதி பல நட்புகளைப் பெற உதவும் போது மறுபுறம்....இதே டெக்நாலஜி மனிதனை ஒருவருக்கொருவர் அன்னியப்படுத்தவும் செய்கிறது என்பது உண்மையே!

    அன்ரு இப்படித்தன் இந்த டெக்னாலஜி வளர்ச்சிக்கு அடிமையாகாத ஒரு கிராமத்து அன்பர், வயதானவர், மனதிற்கு நெருங்கியவர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அதை தபால் பெட்டிக்குள் போட தேடித் தேடி.....அலைந்ததது தான் மிச்சம்....நேரே தபால் நிலையம் சென்றுதான் அனுப்ப முடிந்தது.....இப்படி அலைந்தது மெட்ரோ நகரத்தில்!

    ReplyDelete
    Replies
    1. வருக தோழர்
      நல்ல அனுபவம் ... ஹ ஹா ஹா

      Delete
  9. நல்ல பகிர்வு. உண்மைதான் கடிதம் எழுதும் கலை அழிந்து விட்டது
    இதனை நான் யார் சொல்லுங்கள் என்ற கவிதையில் எழுதி இருந்தேன்

    எனக்குத் தெரிந்து குறுஞ்செய்திக்கு கட்டுப்பாடு விதித்தது செல்போன் நிறுவனங்கள் அல்ல. தொலைபேசி கட்டுப்பாட்டு அமைப்பான TRAI தான் என்று நினைக்கிறேன்.
    உண்மையில் அது நன்மைக்கே . இந்த குறுஞ்செய்திகளின் தொல்லை தாங்க முடிவதில்லை. எப்படித்தான் கைபேசிஎன்னைத் தெரிந்து கொள்கிறார்களோ.ஒரு நாளைக்கு ஏகப் பட்ட செய்திகள் வந்து குவிந்து விடுகின்றன.இதனால் முக்கியமான குறுஞ்செய்தியை படிக்காமல் போக வாய்ப்பு உண்டாகிறது.பண்டிகை நாட்களில் வாழ்த்து செய்திகளின் தொல்லை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் கூட வலி தருகின்ற காலத்தில் நாம்...

      Delete
  10. மது,

    உங்கள் பதிவைப் படித்துவிட்டு எதேச்சயாக இந்தப் பாடலைக் கேட்டேன். நல்ல அருமையான கட்டுரைக்கேற்ற பாடல்.

    https://www.youtube.com/watch?v=dcLbS0yxzdk

    ReplyDelete
    Replies
    1. நானும் கேட்டேன் நல்லா இருக்கு வரிகளை தனியே தேடித் படித்தேன்..

      Delete
  11. வாழ்த்து அட்டைகள் அனுப்பிய காலம் நினைவுக்கு வந்தது! எஸ். எம்.எஸ் எனக்கு ஒத்து வரவில்லை! அதனால் வாழ்த்துவது நின்று போய்விட்டது!

    ReplyDelete
  12. வணக்கம் !

    தங்களின் இப் பகிர்வினைக் கண்ணும் போது கடந்த கால நினைவுகள்
    சில மனக் கண்களில் வந்து போகின்றன! அருமையான படைப்பு !
    வாழ்த்துக்கள் சகோதரா மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  13. காலம் பலரை நவீனம் என்ற பெயரில் தொலைத்துவிட்டது.ம்ம் இன்னும் வாழ்த்து அட்டைகள் நினைவில் இருக்கு.

    ReplyDelete
  14. அது ஒரு மகிழ்ச்சியான காலம் தான். நினைவுகளை மீட்டிப் பார்த்தால் கவலையாகவே உள்ளது. எவ்வளவு சின்னச்சின்ன சந்தோஷம் தரும் விடயங்களை இழந்து விட்டோம். பதிவுக்கு நன்றி சகோ !

    ReplyDelete
  15. தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மெசேஜ் அனுப்பக் கூடுதல் கட்டணம்..?!..என்ன ஒரு அடாவடித்தனம்..! அந்த நாட்களில்தானே என்னைப்போன்ற சோம்பேறிகள் மெசேஜ் அனுப்புறதே..!
    இவர்களுக்குப் பாடம் கற்பிக்க நீங்கள் சொன்ன யோசனை போதாது.
    கொஞ்சமிருக்கிற அஞ்சல் சேவையும் இனிப் படிப்படியாகக் குறைந்துவிடும் போலிருக்கிறது..! அந்தப் புண்ணியத்தையும் அரசாங்கமும் அஞ்சல்துறைப் பணியாளர்களுமே செய்துவிடுவார்கள் போலிருக்கிறது..!
    நல்ல பகிர்வு. நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. மிக முக்கியமான ஒரு விசயத்தை எளிதாக சொல்லிவிட்டீர்கள் ....
      பாதி யோசி புத்தகங்கள் உரியோரை அடைவைதில்லை எனும் காரணத்தால் கொரியருக்கு மாறிய விசயம் தெரியும்தானே..

      Delete
  16. நல்ல பகிர்வு. நவீனம் என்ற பெயரில் பல விஷயங்களை நாம் இழந்து விட்டோம்.....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எனது நண்பர்களின் கடிதங்கள் என்னிடம் இன்னும் இருக்கின்றன

      Delete

Post a Comment

வருக வருக