பாட்டல் ராதா


பாட்டல் ராதா - அனுபவம்
----------------------------------

தற்காலத்தில் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுவது குடி. குடித்துவிட்டு உருள்பவர்களைப் பார்க்க பார் வாசலுக்குத்தான் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. மதுக் கடை இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் அக்காட்சி கிடைக்கும். பாட்டிலுக்குப் பத்து ரூபாய் கூடுதலாகக் கேட்பது பேசப்பட்ட அளவுக்குக்கூட, குடியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்திருப்பது பேச்சாக மாறவில்லை. 

இந்தக் குறையை, பாட்டல் ராதா படம் தீர்த்துவைத்திருக்கிறது. இந்தப் பேசுபொருளை விவாதமாக்குவதற்கான முதல் உரையாடலைத் தொடங்கியிருக்கிறது. இந்தச் செயலுக்கான முழுப் பாராட்டுகளும் இயக்குநர் தினகரன் சிவலிங்கத்தையும் படத்தின் தயாரிப்பாளரையும் சேர்கிறது.

நுண்ணிய தள்ளாட்ட நடையோடு, யாரையும் பார்க்காமல் தனக்குள் தானமிழ்ந்து போகும் ஆளைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஓர் ஆளின் வாழ்வின் ஒரு பகுதி இதில் வெளிச்சம் காட்டப்படுகிறது. உண்மையில் அவன் ஓர் ஆள் அல்ல; பல லட்சம் பேரின் ஒற்றைப் பிரதிநிதி. 

குடி என்பது மகிழ்ச்சிக் கூடலில் ஓர் அங்கமாக இருந்ததோ, பின்வந்த காலத்தில் அதற்கு சமூக ஏற்புக் கிடைத்ததோ நாம் அறிந்தது. அதற்கும் அடுத்த கட்டமாக, குடி இல்லாத இடமில்லை என்று ஆகிவிட்டது. 

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒன்று தங்களை அடையாளம் காணலாம்; அல்லது ‘ஏ... இதே மாதிரி ஒராளு எங்க தெருவுல இருக்காம்ப்பா’ என்று சொல்லலாம். பார்வையாளர்களில் ஒவ்வொருவரையும் தொட்டுவிடுகிறது பாட்டல் ராதா.

நாம் பார்த்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவை விவரங்களோடு திரையில் விரிகின்றன. நாம் அதில் பங்கெடுத்த உணர்வை அடைகிறோம். 

குடிநோயாளியாகிவிட்ட ஒருவன், மனமாற்றத்துக்கான நேரம் கொடுக்கும் சீர்திருத்த மையத்தின் வாழ்க்கை, பல குடிநோயாளிகளின் பொழுதுகளிலான சம்பவங்கள், வெவ்வேறு போதைகளுக்கு அடிமைப்பட்டவர்களின் மனநிலைப் பிறழ்வுகள் எந்த மாதிரி இருக்கும் என்பதற்கான கோடி காட்டல்கள், குடிநோயாளியைச் சார்ந்திருக்கும் குடும்பத்தின் நிலை...

இவற்றை இந்தப் படம் நுண்ணிய தகவல்களோடு பேசுகிறது. முந்தைய பத்தியைப் பார்த்தால் அசுவாரசியம் போலத் தோன்றலாம். ஆனால், அவை அத்தனையையும் சுவாரசியமாகச் சொல்லி நகர்கிறது கதை. 

எல்லாம் வாழ்வு. பார்ப்பவர்கள் தங்களை அடையாளம் காணலாம். அல்லது தனக்கு நன்கு தெரிந்தவர்களை இந்தப் படத்தில் பார்க்கலாம். 

‘கனெக்ட்’ என்று சொல்லப்படுவது முழுமையாக உள்ள ‘பாட்டல் ராதா’ படத்தைப் பார்த்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கவிஞர் ரமேஷ் வைத்யா அவர்களின் பதிவு

Comments